

கரூர் அருகே கலப்பட டீசலை விற்பனை செய்த இளைஞரைக் கைது செய்து 1,000 லிட்டர் கலப்பட டீசலுடன் லாரியைக் கரூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் காசிபாளையத்தில் தனியார் கல் குவாரி நிறுவனம் உள்ளது. இங்கு உரிமமின்றிக் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகக் கரூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சத்யப்பிரியா மற்றும் போலீஸார் தனியார் கிரஷர் நிறுவனத்தில் இன்று சோதனையிட்டனர்.
அப்போது கல் குவாரியில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியை சோதனையிட்டபோது அந்த லாரியில் சுமார் 1,000 லிட்டர் கலப்பட டீசல் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கலப்பட டீசல் விற்பனை செய்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசலைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆகாஷ் (22) என்பவர் கைது செய்யப்பட்டார்.
டீசலுடன் லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கல் குவாரி உரிமையாளர் உள்ளிட்ட இதில் தொடர்புடைய மற்றவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.