கொடைக்கானலில் சாய் சுருதி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு 

கொடைக்கானல் சாய் சுருதியில் நடந்த காயத்ரி தேவி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துர்கா ஸ்டாலின். 
கொடைக்கானல் சாய் சுருதியில் நடந்த காயத்ரி தேவி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துர்கா ஸ்டாலின். 
Updated on
1 min read

கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி மற்றும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலையில் சாய் சுருதி ஆசிரமம் உள்ளது. இங்கு சத்தியசாயி சேவா நிறுவனங்கள் சார்பில் காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றன.

முதல் நாள் கலசங்களுக்கு சிறப்புப் பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இரண்டாவது நாள் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடைக்கானல் வந்தார்.

கொடைக்கானலில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது. காயத்ரி தேவி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்தின்போது கோபுரத்தின் மீது ஏறிக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.

துர்கா ஸ்டாலின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவர் வந்துசென்ற பிறகே தகவல் தெரியவந்தது. துர்கா ஸ்டாலினுடன் சாய் சுருதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிலர் ஹெலிகாப்டரில் வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in