

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை அழிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை இணைந்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர் பேசுகையில், ''தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சட்டக் கூலி ரூ.273-ஐ ஒரு இடத்திலும் முழுமையாகக் கொடுப்பது கிடையாது. இதற்காக 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.
இதனிடையே, தேசிய ஊரக வேலை திட்டத்துக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், பெருநிறுவன முதலாளிகள் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஆனால், பிரதமரால் நிதியை நிறுத்த முடியவில்லை.
எனவே, சாதிய அடிப்படையில் வேலை மற்றும் கூலியை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களிடையே பிரிவினை மற்றும் கலவரத்தை ஏற்படுத்தி, தொழிலாளர்களிடம் ஒற்றுமை இல்லை என்று வெளிக்காட்டி 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அழிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது" என்று தெரிவித்தார்.