

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனின் மகன் ஓட்டி வந்த கார், சேலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமாக வானதி சீனிவாசன் உள்ளார். இவரது மகன் ஆதர்ஷ் (23). இவர் கோவையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு காரில் சென்னைக்குப் புறப்பட்டார். அவரே காரை ஓட்டி வந்தார்.
நள்ளிரவில் சேலம் கொண்டலாம்பட்டி அருகே பட்டர்ஃபிளை மேம்பாலத்தின் வளைவில் திரும்பும்போது, சென்டர் மீடியனில் மோதி, ஆதர்ஷின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அவர் நல்வாய்ப்பாகக் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். தகவலறிந்த பாஜகவினர் சம்பவ இடத்திற்குச் சென்று, ஆதர்ஷை மீட்டனர்.
பின்னர் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் வேறொரு காரில் ஆதர்ஷ் சென்னைக்குப் புறப்பட்டார். விபத்துக்குள்ளான கார், அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.