

அரியலூரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டம் இன்று (செப்.11) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏ கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த மாராத்தான் ஓட்டத்தை மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர் பேசுகையில், ''அரியலூர் மாவட்டத்தில் நாளை (செப்.12) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் தங்களுடைய ஆதார் அட்டை (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட இதர அடையாள அட்டைகளைக் காண்பித்து தடுப்பூசியினைச் செலுத்திக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.