

காரைக்காலில் கிராமப் பகுதிகளில் நிறுத்தப்பட்ட பேருந்துப் போக்குவரத்து சேவையை அமைச்சர் சந்திர பிரியங்கா மீண்டும் தொடங்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்டம் பொன்பேத்தி, கிளியனூர், கோட்டகம், அண்டூர், உசுப்பூர், வடகட்டளை, பண்டாரவடை, குரும்பகரம், நெடுங்காடு, வடமட்டம் ஆகிய கிராமப் பகுதிகள் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்துப் போக்குவரத்து சேவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
இந்த வழித்தடங்களில் மீண்டும் போக்குவரத்து சேவையைத் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் அப்பகுதிகள் வழியாக, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகப் பேருந்து போக்குவரத்து சேவையைத் தொடங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, நெடுங்காடு கடை வீதியில் இன்று (செப்.6) நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சந்திர பிரியங்கா பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.