

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) பெட்ரோலைத் தன் மீது ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மீட்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் பாட்டிலில் கொண்டுவந்த பெட்ரோலை எடுத்துத் தன் மீது ஊற்றிக் கொண்டார். இதைப் பார்த்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், நிகழ்விடத்துக்குச் சென்று மணிகண்டனை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தான் பட்டுக்கோட்டை நகராட்சியில் வேலை பார்த்தபோது, தன் மீது மோட்டார் காணாமல் போனது தொடர்பாக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாகத் தனக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது வேலை தர வேண்டும் எனப் பல முறை கோரியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார்.
இதையடுத்து மணிகண்டனைக் காவல்துறையினர் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர் ஏற்கெனவே தனது கோரிக்கைகளை வலியுறுத்திப் பலமுறை செல்போன் டவரில் ஏறித் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.