

நிபா வைரஸ் குறித்து யாரும் பதற்றம் கொள்ள வேண்டாம் எனத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நோய் கட்டுப்பாட்டுக் குழு கேரளா விரைந்துள்ளது.
இந்த நிலையில் நிபா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "கேரளா நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். நிபா வைரஸ் பழம் உண்ணும் வௌவால்களால் பரவக்கூடிய நோய். நிபா வைரஸ் குறித்து நாம் பதற்றம் கொள்ள வேண்டாம். எனினும் நாம் கவனக் குறைவாகவும் இருக்கக் கூடாது.
சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு நிபா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.