

கர்ப்பிணிகளுக்கு வரும் செப்டம்பர் 10-ம் தேதி வரை கோவையில் உள்ள 5 தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''கோவை மாவட்டத்தில் சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நமது மாவட்ட நிர்வாகம் சார்பாக கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் 24 மணி நேரமும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குத் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் உள்ள 33,813 கர்ப்பிணிகளில், 20,094 பேருக்கு (59 சதவீதம்) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுதவிர, வரும் 10-ம் தேதி வரை கேஎம்சிஎச் மருத்துவமனை, கொங்கு நாடு மருத்துவமனை, டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை, பிஎஸ்ஜி மருத்துவமனை, கங்கா மருத்துவமனை ஆகிய 5 தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்''.
இவ்வாறு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.