

நியூசிலாந்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறும்போது, ''டெல்டா வைரஸ் இன்னமும் உச்சம் அடையவில்லை. எனவே, நியூசிலாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை கட்டுப்பாடுகள் தொடரும். கரோனா பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்த 13,000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
நியூசிலாந்தில் இதுவரை 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.