காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

காபூல் விமான நிலையத்தில் வெளிநாட்டுப் படைகளிடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “காபூல் விமான நிலையத்தில் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அமெரிக்கப் படைகள், ஆப்கன் ராணுவப் படைகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை காபூல் விமான நிலையத்தில் உள்ள ஜெர்மன் ராணுவமும் உறுதி செய்துள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் பதற்றம் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in