

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைபற்றிய நிலையில் வெளிநாடுகளுக்கு தப்பித்துசச் செல்ல விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் அலைபோல் திரண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க இருப்பதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு பிற நாடுகளை நோக்கி படை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் காபூலில் மக்கள் அலைகடலென திரண்டுள்ளனர். விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் இதில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துப்பாக்கிச் சூடு குறித்து ஆப்கான் வாசி ஒருவர் கூறும்போது, “ எனக்கு இங்கு இருப்பது பயமாக இருக்கிறது. வான்வழித் தாக்குதல்கள் நடக்கின்றன” என்றார்.
விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் திரண்டுள்ள காட்சி: