

சுதந்திர தினத்தையொட்டி தொட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலத்தில் தேசிய கொடியேற்றச் சென்ற தலைவர் செல்வராணி மற்றும் அவரது கணவர், ஊராட்சி செயலாளர் ஆகியோரை கிராம மக்கல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டிக்குப்பம் ஊராட்சியில் 7 வார்டுகள் உள்ளன.
இந்த ஊராட்சியின் தலைவராக செல்வராணி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று சுதந்திர தினம் என்பதால், தனது கணவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி செயலாளருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றபோது,
அங்கு திரண்டிருந்த கிராம மக்கள் அவர்களை முற்றுகையிட்டு, தெருக்குழாய் அமைக்காமலேயே குழாய் அமைத்ததாகக் கூறி ரூ.10 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் கிராம மக்களை உறுப்பினராக சேர்க்க ரூ.5 ஆயிரம் வரை கையூட்டு கேட்பதேன் எனக் கூறி, அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வெங்கடேசன், அவர்களிடம் விளக்கம் அளித்தபோது, அவர்கள் அதை ஏற்கவில்லை.
தெருக்குழாய் அமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர் கிராமமக்கள். இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் தேசியக் கொடியேற்றினார்