'மக்கள் ஆசி யாத்திரை’: கோவையில் நாளை தொடங்குகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

'மக்கள் ஆசி யாத்திரை’: கோவையில் நாளை தொடங்குகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்
Updated on
1 min read

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் 'மக்கள் ஆசி யாத்திரை' எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் நாளை (ஆக.16)தொடங்குகிறார்.

வரும் 18-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறும்போது, "மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நாளை காலை 10.40 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், நேராக டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பயணத்தை தொடங்குகிறார்.

முதலில் காமராஜபுரத்தில் திறந்த மேடையில் நடைபெறும் நிகழ்வில் மத்திய அரசின் திட்டங்களால் பலன்பெற்ற பயனாளிகள் பேச உள்ளனர். அந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து இதேபோன்று, துடியலூர், மேட்டுப்பாளையம், புஞ்சை புளியம்பட்டி, சேவூர், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் எல்.முருகன் கலந்துகொண்டு பேச உள்ளார்.

இரண்டாவது நாளில் தாராபுரம், காங்கேயம், அரச்சலூர் (மொடக்குறிச்சி), ஈரோடு, சங்ககிரி, திருச்செங்கோடு ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

மூன்றாவது நாளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான கோனூருக்கு செல்கிறார். பின்னர், கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு, ராசிபுரம், மல்லூர், சேலம் ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளார்"என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in