

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு அதீத காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
காய்ச்சலுடன் அவருக்கு தொண்டை வலியும் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால், அவருக்குக் கரோனா இல்லை என்றே முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவருக்கு இன்னும் காய்ச்சல் குறையவில்லை. ஆதலால் அவர் ஓய்வில் இருக்கிறார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்றது. இதில், ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா. இந்தியாவுக்கு தடகளப் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை அவர் வென்று கொடுத்திருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் முயற்சியில் 87.03 மீட்டர் தூரத்துக்கும், இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியை பாயவிட்டார். நான்காவது மற்றும் ஐந்தாவது முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தது.
அவரை இன்னும் தேசமே கொண்டாடி வருகிறது. தன் மீதான தேச மக்களின் அன்பைப் பற்றி, நான் இந்த உணர்வை சிலாகித்து வருகிறேன் என்று நீரஜ் தனது அண்மை ட்வீட்டில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ள செய்தி பரவலாக, அவர் குணம் பெற வேண்டியும் சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.