Published : 13 Aug 2021 05:35 PM
Last Updated : 13 Aug 2021 05:35 PM

வசதி இருப்பதால் ஒரே நபர் 4, 5 கார் வாங்கக் கூடாது: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து

வசதி வாய்ப்பு இருப்பதால் ஒரே நபர் 4, 5 கார்கள் வாங்கக் கூடாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாகன நிறுத்துவது தொடர்பாக கட்டுமான நிறுவனங்களுக்கு மகாராஷ்டிரா அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நவி மும்பையைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான சந்தீப் தாக்கூர் மும்பை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அந்த மனுவில், கார் பார்க்கிங்குக்கான இடத்தைக் குறைக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த வளர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு திட்ட விதிமுறைகளைத் திருத்தி மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனங்கள் போதிய பார்க்கிங் வசதியை செய்துதரவில்லை. அதனாலேயே மக்கள் வெளியில் வாகனங்களை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கர்ணி தலைமையிலான முதலாவது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதிகள், கார்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக கார் வாங்கக் கூடாது. அவர்களுக்கு வசதி இருக்கிறது என்பதால் வாங்கினால், அந்தக் காரை பார்க் செய்ய போதிய இடம் இருக்கிறதா என்பதைக் கருதி வாங்குகிறார்களா என்பதையும் உறுதிப் படுத்தவேண்டும். அனைத்து சாலைகளிலுமே கார்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ளன. 30 சதவீத சாலைகள் தெருவோர பார்க்கிங் கார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் சாதாரணமாகிவிட்டது.

இவற்றைக் கட்டுப்படுத்த பார்க்கிங் ஒழுங்குமுறைக் கொள்கை வகுப்பது அவசியம். ஒரு சமூகம் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அது குழப்பங்களை உண்டாக்கும். அவற்றைக் கருத்தில் கொண்டு பொதுநலத்துடனேயே வாகனப் பார்க்கிங் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும், இந்த பொதுநல வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x