

திருச்சி பால்பண்ணை பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர். அத்துடன் குடோன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்பண்ணை லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு குடோனில், விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படையினர் மற்றும் காந்தி மார்க்கெட் போலீஸார் அந்த இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 27 மூட்டைகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 550 கிலோ குட்கா இருப்பதைக் கண்டறிந்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான ரவிசங்கர் மகன் ராஜேஸ் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரூ.10 லட்சம் சந்தை மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரைக் கைது செய்த போலீஸாரை மாநகரக் காவல் ஆணையர் ஏ.அருண் பாராட்டினார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகரக் காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.