

அரியலூர் மாவட்டம் பிலாக்குறிச்சி கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பொதுக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் பிலாக்குறிச்சி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலருக்குக் கடந்த சில வாரங்களாகக் காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தன. அதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்து பரிசோதனை செய்ததில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாகப் பரிசோதனையில் தெரியவந்தது.
இதனிடையே காய்ச்சல் குறையாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிவேதா (23) என்ற இளம்பெண் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சலுக்குத் தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவு ஆகிறது. எனவே, அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை தரவேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தங்கள் கிராமத்தில் பலருக்கும் காய்ச்சல் உள்ளதால் மருத்துவ முகாம் அமைத்துக் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.