

தலிபான்கள் கட்டுப்பாட்டில் மேலும் ஒரு மாகாணம் வந்துள்ளது. ஃபாரா எனும் நகரை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அங்கு ஃபாரா எனப்படும் முக்கியமான மாகாணத்தை தலிபான் தீவிரவாதிகள் இன்று தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஃபாரா மாகாணத்தின் தலைநகரான ஃபாரா நகரில் தலிபான்கள் கை ஓங்கிவிட்டது. அங்குள்ள காவல்துறை தலைமையகம், மாகாண ஆளுநர் மாளிகை அனைத்தும் தலிபான்கள்வசம் வந்துவிட்டது.
இதனை ஆப்கானிஸ்தானின் டோலோ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானின் 6 மாகாணங்கள் தலிபான்கள்வசம் வந்துவிட்டது. குண்டூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன் ஆகிய மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
ஆப்கானிஸ்தான் வாழ் இந்தியர்கள் அனைவரும் தாயகம் திரும்புமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.