

இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. வரும் 2024-ல் மோடி அரசைத் தூக்கியெறிந்து ராகுலைப் பிரதமராக்குவோம் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் இன்று சைக்கிள் பேரணி நடத்தினர்.
காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் சுப்ரமணியன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காமராஜர், காந்தி, நேரு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "நாட்டின் சுதந்திரம் நரேந்திர மோடி அரசால் பறிபோகியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. மத்திய பாஜக அரசு மக்களை வஞ்சித்துள்ளது. அடிமை ஆட்சி நடத்தும் நரேந்திர மோடி அரசை தூக்கி எறிந்தால்தான் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.
இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தயாராகியுள்ளது. வரும் 2024-ல் மோடி அரசைத் தூக்கியெறிந்து ராகுலை இந்நாட்டின் பிரதமராகக் கொண்டுவருவோம்" என்று குறிப்பிட்டார்.