

ஜப்பானின் டோக்கியோ நகரில் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
இதன் மூலம் தடகளப் போட்டியில் ஒலிம்பிக் களத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இவரைப் பற்றி பல்வேறு சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீரஜ் சோப்ரா ஹரியாணா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்தவர். இவர் சண்டிகரில் உள்ள டிஏவி கல்லூரியில் பட்டம் பயின்றார். பின்னர் இந்திய ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்தில் இவர் சுபேதார் பதவியில் உள்ளார். ராஜ்புட்டானா ரைபில்ஸ் பிரிவில் பணிபுரிகிறார்.
ஒலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவரது வெற்றியை இந்திய ராணுவம் பாராட்டிப் புகழ்ந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக வரலாறு படைத்த நீரஜ் சோப்ராவுக்கு மாநில அரசு ரூ.6 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. இதுதவிர பிசிசிஐ ரூ.1 கோடி ரொக்கப்பரிசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. நீரஜ் சோப்ரா 2011 ஆம் ஆண்டு தான் ஈட்டி எறிதல் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கினார்.
2016 ஆன் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றார். தற்போது ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருக்கிறார். ராணுவத் தளபதி எம்.எம்.நாராவனே, நீரஜ் சோப்ராவைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.