

இறுதிவரை மனந்தளராது போராடியதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி 3-4 என்ற கணக்கில் பிரிட்டன் அணியிடம் போராடி, தோல்வியைத் தழுவியது.
தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணிக்குத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினரின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்குச் சற்றும் குறைவில்லாதது. முதன்முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதிச் சுற்று வரை இந்தியாவைக் கொண்டு சென்றதற்காகவும், பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை மனந்தளராது போராடியதற்காகவும் நமது அணியின் ஒவ்வொரு வீராங்கனையையும் வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.