காபூல் தாக்குதல்: தலிபான்கள் பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிரவாதிகள் சக்திவாய்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர். பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா கானின் இல்லம் அருகேயும் குண்டுவெடிப்பை நடத்தினர். எனினும் இந்தத் தாக்குதலில் பிஸ்மில்லாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு தலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சைபிமுல்லா முஜாகிதீன் கூறும்போது, “எங்கள் அமைப்பினர்தான் பாதுகாப்பு அமைச்சர் இல்லத்துக்கு தாக்குதல் நடத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு, இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து ஆப்கன் பாதுகாப்புப் படையினருக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் சண்டை நிலவி வருகிறது. இதனால் ஆப்கனில் அங்கு பதற்றம் நிலவுகிறது.
