

வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பில் அதிருப்தி இருப்பதாகக் கூறி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் மண்ணெண்ணெய் கேனுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலை வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் வெளியிட்டார். இந்நிலையில், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி விசுவாசிகளை வடக்கு மாவட்டத் தலைவர் புறக்கணிப்பதாகவும், ஜாதி அடிப்படையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயாரித்துள்ளதாகவும், கட்சிக்காகவும், பொதுமக்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் பதவியை பறித்துவிட்டு, ஜாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளதாகவும் கூறி, காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் அய்யலுசாமி தலைமையில், முன்னாள் நகரத் தலைவர் சண்முகராஜ், முன்னாள் வட்டாரத் தலைவர் ரமேஷ்மூர்த்தி, முன்னாள் கயத்தாறு ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, நிர்வாகிகள் செம்புக்குட்டி, கருப்பசாமி ஆகியோர் கோவில்பட்டி காந்தி மண்டபத்துக்கு நேற்று மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர், தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எங்களை ஒடுக்க நினைத்தால் தீக்குளிக்க கூட தயங்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியை ஜாதி அமைப்பாக மாற்ற முயற்சிக்கும் வடக்கு மாவட்டத் தலைவரைக் கண்டித்தும், காங்கிரஸ் விசுவாசிகளுக்கு பதவி வழங்கக் கோரியும் கோஷங்களை முழங்கினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடமாட்டோம் என அறிவித்தனர்.
தகவலறிந்தவுடன் காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் துணைத் தலைவரும், காந்தி மண்டப அறக்கட்டளை நிர்வாகியுமான திருப்பதிராஜா போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாகக் கூறி, அவர்கள் கலைந்து சென்றனர்.
வாக்குவாதம்:
காந்தி மண்டபத்துக்கு வந்த போலீஸார் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்று கூறி, மண்ணெண்ணெய் கேனை எடுத்துச்செல்ல முயன்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர், மண்டபத்துக்குள் அமைதியான முறையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உள்ளே வந்து நாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை நீங்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.