

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புறக்கணிக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் குடும்பம் உள்ளிட்ட 13 குடும்பங்களை சொந்த சமூகத்தினருடன் அதிகாரிகள் ஒன்று சேர்த்து வைத்தனர்.
இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெருமாள் ஊராட்சித் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் பெருமாள், ‘எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலர் எங்கள் குடும்பத்தையும் எனக்கு ஆதரவாக இருக்கும் 12 குடும்பங்களையும் சமுதாய புறக்கணிப்பு செய்துள்ளனர்.
எங்களை சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை. அதேபோல் எங்களது குடும்ப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.
அடுத்த வாரம் நடக்கவுள்ள கோயில் விழாவிற்கு எங்களிடம் வரி வசூலிக்கவில்லை. எங்களை புறக்கணிப்பு செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் புகார் தெரிவித்தார்.
ஆட்சியர் உத்தரவில் இன்று சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. தமிழரசி எம்எல்ஏ, டிஎஸ்பி பால்பாண்டி, வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 13 குடும்பங்களையும் ஒன்று சேர்த்து வரிவசூலித்து திருவிழா நடத்துவது எனவும்,
மேலும் கரோனா தொற்று காலம் என்பதால் சமூக இடைவெளியுடன், அனைவரும் முகக்கவசம் அணிந்து அரசு வழிகாட்டுதல்படி விழாவை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.