

சிவகங்கையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடந்த விழாவில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கர் வராததால் அதிகாரிகள் அதிமுக எம்எல்ஏ முன்னிலையில் விழாவை நடத்தினர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்புச்சாரா நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.
இவ்விழாவிற்கு மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி, சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், காரைக்குடி காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் விழாவிற்கு அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் மட்டுமே வந்திருந்தார். மேலும் அவர் காத்திருந்த நிலையில் மற்ற இருவரும் வரவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் விழா தொடங்கியது.
விழாவில் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய ஆணை, விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை ஆட்சியர் வழங்கினார். மொத்தம் 1,003 பேரில் முதற்கட்டமாக 100 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டன.
மற்றவர்களுக்கு வீடுகளுக்கேச் சென்று வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். தொழிலாளர் நல உதவி ஆணையர் கோட்டீஸ்வரி, சிவகங்கை ஒன்றியத் தலைவர் மஞ்சுளா, ஊராட்சித் தலைவர் மணிமுத்து பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியேறிய நிலையில், மாங்குடி எம்எல்ஏ தாமதமாக வந்தார். இதையடுத்து அங்கிருந்த சிலரை அழைத்து மாங்குடி எம்எல்ஏவை நலத்திட்ட உதவியை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்