

‘‘சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு வழங்கப்படும்,’’ என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. காரைக்குடி, மித்ராவயல் பிர்க்காக்கள் கிராம கணக்குகளை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
வட்டாட்சியர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விண்ணப்பித்த 3,500 பேருக்கு ரேஷன்கார்டுகள் அச்சடித்து வரப்பெற்றுள்ளன. அதில் 1,600 பேருக்கு கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. மீதி இருதினங்களில் வழங்கப்படும். மேலும் 2,000 கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்த 300 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
ஏற்கனவே உள்ள ரேஷன்கார்டுகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிய கார்டுகளுக்கு அரசு தெளிவுரை வந்ததும் வழங்கப்படும், என்றார்.