மானாவாரி விவசாயிகள் சங்கத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் போராட்டம்
கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டியில் உள்ள மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியை ஆய்வு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பி.அய்யலுசாமி தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் மகேஷ்குமார், நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ், ஒன்றிய தலைவர் செல்லத்துரை, சேவாதள தலைவர் சக்தி விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு, சித்திரம்பட்டி மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியை ஆய்வு செய்ய வேண்டும்.
அந்த கம்பெனி மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பயிர்களுக்கான தொகை முழுமையாக பெற்று தர வேண்டும் என கோஷங்கள் முழங்கினர்.
தொடர்ந்து கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டியில் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி கடம்பூர் அருகே மலைப்பட்டியில் குருசாமி என்பவர் மூலமாக அங்குள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 62.5 டன் உளுந்தை கொள்முதல் செய்தனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ.42,15,210 ஆகும். அதற்கு தற்போது வரை ரூ.22 லட்சம் வழங்கவில்லை. இதனால் மன உளைச்சல் இருந்த குருசாமி கடந்த மே மாதம் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகன் ராஜகோபாலிடம் விவசாயிகள் பணத்தை பெற்று தர வலியுறுத்தினர்.
அவரும், மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியை அணுகினர். அவர்கள் ஒரு லட்ச ரூபாய் மட்டும் ராஜகோபாலின் வங்கி கணக்கில் செலுத்தினர். அவர்கள் ரூ.21,25,210 தர வேண்டும். ஆனால், அந்த பணத்தை அவர்கள் தர மறுக்கின்றனர். இதே போல், அந்த நிறுவனம் பல விவசாயிகளிடம் கொள்முதல் செய்துவிட்டு, பணத்தை தரவில்லையென புகார்கள் வருகின்றன.
எனவே, கடம்பூர் அருகே மலைபட்டி விவசாயிகளின் பணத்தை பெற்று தர வேண்டும். மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனிக்கு அரசு வழங்கி உள்ள மானியம் மற்றும் வட்டியில்லா கடன் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
