

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கில் பாதை மறிக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் இன்று (ஜூலை 26) குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளமங்கலம் வடக்கு ஊராட்சி கொப்பியான் குடியிருப்பையும், ஆதிதிராவிடர் தெருவையும் இணைக்கக்கூடிய சுமார் 1 கிலோ மீட்டரில் உள்ள இணைப்புச் சாலையில் சுமார் 10 மீட்டர் நீளத்தைத் தனது சொந்த இடம் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாதையை மறித்துவிட்டார்.
இதனால், அவ்வழியே கடந்த 3 நாட்களாக யாரும் செல்ல முடியவில்லை. இதுகுறித்து வருவாய்த் துறை, காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, கொப்பியான்குடியிருப்பு பகுதி பொதுமக்கள், சமையல் பாத்திரங்கள், கால்நடைகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர், இது குறித்து ஆலங்குடி வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி, வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் கீரமங்கலம் போலீஸார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.