

மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் பேசிய மைக்கைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார் 'மைக்செட்' மணி.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி பரமநகரைச் சேர்ந்தவர் மணிகுண்டு என்ற மணி (74). இவர், 16 வயதில் இருந்தே 'மைக்செட்' வைத்து தொழில் செய்து வருகிறார்.
மாவட்டத்தில் புகழ்பெற்ற 'மைக்செட்' அமைப்பாளர்களில் ஒருவரான இவர், தனது மைக்கைப் பயன்படுத்தி முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் பேசியதற்காக, அந்த மைக்கைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.
இதுகுறித்து மணி கூறுகையில், "1963-ம் ஆண்டில் இருந்தே மைக்செட் தொழில் செய்து வருகிறேன். அரசியல் பொதுக்கூட்டங்கள், நாடகம், கோயில் திருவிழா போன்ற பிரபரலமான நிகழ்ச்சிகளுக்குப் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மைக்செட் கட்டியுள்ளேன்.
அரசியல் தலைவர்கள் வருவதாக இருந்தால், எதையும் எதிர்பாராமல் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடும். இதனால் மைக்செட் மிகத் தரமாக அமைக்க வேண்டும் என்பதற்காக, கிராமத்தில் தொழில் செய்து வந்தாலும் எங்களுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கும்.
அப்போது, மிகவும் தரமான மைக்காக விளங்கிய, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குண்டு மைக்கில் முன்னாள் முதல்வர் அண்ணா பேசினார்.
அந்தக் கூட்டத்தில் எனக்குப் பாராட்டு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் எம்ஜிஆர், கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற முக்கியமான தலைவர்கள் பேசியுள்ளனர். திமுக பாடகர் நாகூர் அனிபா எனது மைக்கைப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
இதுபோன்று, பல்வேறு நாடக நிகழ்ச்சிகளிலும் முக்கிய பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இதற்காக, அந்த மைக்கைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.
தற்போது, தொழில் மிகவும் நலிவுற்றிருக்கும் சூழலிலும்கூட, அப்போது பயன்படுத்திய எந்தக் கருவியும் தற்போது பயன்பாட்டில் இல்லையென்றாலும், மைக்செட்டுக்காக தலைவர்கள் பாராட்டிய ஊக்கத்தினால் இந்தத் தொழிலைச் சவாலாகச் செய்து வருகிறேன்" என்றார்.