

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தடையை மீறி நடந்த மஞ்சுவிரட்டில் 200 காளைகள் பங்கேற்றன. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
காரைக்குடி அருகே கல்லல் நற்கினி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு தடையால் மஞ்சுவிரட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கோயில் ஆடித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையறிந்த தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீஸார் மஞ்சுவிரட்டுக்கு காளைகளைக் கொண்டு வந்த உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களைத் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
இருந்தபோதிலும் போலீஸாருக்குத் தெரியாமல் கல்லல் புரண்டி கண்மாய்க்குள் மஞ்சுவிரட்டு நடந்தது. செவரக்கோட்டை, புரண்டி, காரைக்குடி, கோவிலூர், கண்டரமாணிக்கம், சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் மாடு முட்டி 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.