சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம்: மணி மண்டபத்தில் ஆட்சியர், எம்எல்ஏக்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம்: மணி மண்டபத்தில் ஆட்சியர், எம்எல்ஏக்கள் மரியாதை
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில், அவரது நினைவு தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் பிறந்த சுப்பிரமணிய சிவா, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து ஆங்கிலேயர்களின் பல்வேறு அடக்குமுறைக்கு உள்ளானார். இதனால் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டிக்கு இடம்பெயர்ந்தார். அங்கிருந்தபடி செயல்பட்ட சிவா உடல்நலக் குறைவு காரணமாக பாப்பாரப்பட்டியிலேயே உயிரிழந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்த இடத்தில் தமிழக அரசு மணி மண்டபம் கட்டிச் சிறப்பித்துள்ளது. இன்று (ஜூலை 23-ம் தேதி) சுப்பிரமணிய சிவாவின் 96-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி பாப்பாரப்பட்டி மணி மண்டபத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), சம்பத்குமார் (அரூர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன், வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல், ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in