

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட விஏஓவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
தேவகோட்டை அருகே ஆறாவயல் சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (50). கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று (ஜூலை 22) தனது வீட்டு இடத்துக்கு புலவரைபடம், அ-பதிவேடு, அடங்கல் வாங்க மேலச்செம்பொன்மாரி குரூப் கிராம நிர்வாக அலுவலர் கோபிகண்ணனை அணுகியுள்ளார்.
அவற்றைக் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, அவர் கேட்ட தொகையைக் கொடுத்து ஆவணங்களைப் பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி விசாரணை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர் கோபிகண்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து, வீடியோ வெளியிட்ட பாண்டி கூறுகையில், "ஏற்கெனவே நாங்கள் அனுபவித்து வரும் நத்தம் புறம்போக்கு நிலத்துக்குப் பட்டா கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே அந்த நிலத்துக்கு வேறொருவருக்குப் பட்டா கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் கோட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
வழக்கு நிலுவையில் இருக்கும் விவரம் தெரிவித்தும் விஏஓ பணத்துக்காகச் செய்துள்ளார். இதனால் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதுபோன்ற காரியங்களை விஏஓ செய்து கொடுக்கிறார் என்பதை நிரூபிக்கவே, அவர் லஞ்சம் வாங்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டேன்" என்றார்.