

தமிழகத்தில் இனி எங்கு குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டாலும் அங்கு இனி கான்கிரீட் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படாது என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவைச் சந்தித்து, கோவை மாநகரில் உள்ள குளங்களில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் கோவையிலுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையினை நேற்று (ஜூலை 21) வழங்கினோம். அப்போதே, கோவை மாநகராட்சி ஆணையரை அழைத்து அமைச்சர் பேசினார்.
அதன் விளைவாக இனி எங்கு குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டாலும் அங்கே கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படமாட்டாது என்றும், சுற்றுச்சூழல் பேணிப் பாதுகாக்கப்படும் என்றும் அரசின் முடிவை அமைச்சர் அறிவித்துள்ளார். குளங்கள், ஏரிகள் மற்றும் நீர் வழிப்பாதைகளில் கான்கிரீட் போன்ற செயற்கையான, நீர் உட்புக முடியாத கட்டுமானங்களை ஏற்படுத்தும்போது மண்ணாலான கரைகளில் நடைபெறும் பல்லுயிர்ப் பெருக்கமும், அதன் வாழ்விடமும் மொத்தமாக அழியும் சூழல் ஏற்படும். இதனைத் தடுக்கவே குளங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தோம்.
அதை உடனடியாகக் கவனத்தில் கொண்டு உரிய முடிவு எடுத்த அரசின் செயலுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.