

கோவை அருகே ஒரு இறைச்சிக் கடையில் ஆடி ஆஃபர் வழங்கி, ஆட்டு இறைச்சி ஒரு கிலோ வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் குடமும், அரைக் கிலோ வாங்கினால் ஒரு முழு தேங்காய் இலவசமாக வழங்கப்படுகிறது.
கோவை - திருச்சி சாலையில், சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தை அடுத்த, ரங்கநாதபுரம் பகுதியில் அமர்ஜோதி நகர் அருகே செயல்பட்டு வரும் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான ‘‘அம்மா அப்பா ஆட்டுக் கறிக்கடை’’ என்ற ஆட்டு இறைச்சிக்கடையில்தான் இந்த ஆடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் ஆட்டுக்கறி கிலோ ரூ.800 வரை விற்கப்படுகிறது. ஆனால், இங்கு விலை குறைவாக விற்பதோடு, ஆடி ஆஃபரில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுவதால், கடந்த சில நாட்களாக தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் அம்மா அப்பா ஆட்டுக்கறிக்கடையில் இறைச்சியை வாங்கக் குவிந்து வருகின்றனர்.
முதல்முறையாக ஆஃபர்
இதுதொடர்பாக இறைச்சிக் கடையின் உரிமையாளர் ராஜசேகர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, இங்கு நானும் எனது உறவினர்களும் என மொத்தம் 5 பேர் பணியாற்றுகிறோம். இங்கு ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.560, குடல் கறி ஒரு கிலோ ரூ.380, தலைக்கறி ஒரு கிலோ ரூ.180, ரத்தம் ஒரு கப் ரூ.30, நாட்டுக் கோழி ஒரு கிலோ ரூ.350 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. கடந்த 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை இந்த ஆடி ஆஃபர் வழங்கப்படுகிறது.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வியாபாரம் செய்யப்படுகிறது. இலவசமாகக் கொடுக்கும் குடம், தேங்காய் போன்றவற்றை மொத்தமாக வாங்குவதால் எங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை. நிறைவான வியாபாரம், நிறைவான வருவாய் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.