அதிமுக ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து

ஈபிஎஸ் - ஓபிஎஸ்: கோப்புப்படம்
ஈபிஎஸ் - ஓபிஎஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் பலருடன் போன் மூலம் உரையாடிவந்த சசிகலா, தற்போது பல ஊடகங்களுக்கு நேரடியாகப் பேட்டியளித்து வருகிறார். அரசியல் தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தான் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாகவும், பிரிந்துள்ள அதிமுக இணைய வேண்டும் என்பதே தன் எண்ணம் எனவும் சசிகலா தொடர்ந்து கூறிவருகிறார்.

இதனிடையே, உடல்நலமற்று ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைச் சமீபத்தில் சசிகலா சந்தித்து அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

அப்போது, அங்கு ஏற்கெனவே இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். மேலும், மருத்துவமனைக்கு வந்திருந்த சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் வந்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், சசிகலா விவகாரம், மதுசூதனன் உடல்நலம், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், அதிமுக உட்கட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க, இன்று (ஜூலை 22) காலை 10.30 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், காலை முதலே அதிமுக தலைமை அலுவலகத்தில், சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்கள், பெண் நிர்வாகிகள் வந்திருந்தனர். ஆனால், ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாகத் தலைமை அலுவலகத்திலிருந்து அங்கிருந்தவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கான மாற்றுத் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in