Last Updated : 21 Jul, 2021 09:56 PM

 

Published : 21 Jul 2021 09:56 PM
Last Updated : 21 Jul 2021 09:56 PM

மணல் கடத்தல் லாரியை விரட்டிப் பிடிக்க முயன்ற போலீஸார்; தடுத்து நிறுத்திய கட்சிப் பிரமுகர்கள்: வைரலாகும் வீடியோ குறித்து சிவகங்கை எஸ்.பி. விசாரணை

திருவேகம்பத்தூர் அருகே மணல் லாரிக்கு பாதுகாப்பாக சென்ற கார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மணல் கடத்தல் லாரியை இருச்சக்கர வாகனத்தில் விரட்டிப் பிடிக்க முயன்ற போலீஸாரை, காரை குறுக்கேவிட்டு தடுத்த பிரமுகர்கள் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து எஸ்.பி. செந்தில்குமார் விசாரித்தார்.

தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் சோதனைச் சாவடியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத மணல் லாரி நிற்காமல் சென்றது. இதையடுத்து அந்த லாரியை காவலர்கள் ஃபிரோஸ்கான், திவாகர் ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றனர்.

ஆனால் லாரி ஓட்டுநர் போலீஸாரை மோதுவதுபோல் சாலையோரத்தில் லாரியை ஒதுக்கிவிட்டு, வேகமாகச் சென்றார். ஆனால் போலீஸாரும் விடாமல் விரட்டி பிடிக்க முயன்றனர். அந்த சமயத்தில் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்தவர்கள் போலீஸார் செல்ல முடியாதபடி இருச்சக்கரவாகனத்திற்கு குறுக்கே காரை நிறுத்தினர். இதனால் நிலைதடுமாறிய போலீஸாரும் வாகனத்தை நிறுத்தினர்.

காரில் இருந்து இறங்கி சிலர், சிறப்பு எஸ்ஐ ஒருவர் பேசுவதாக கூறி மொபைலை கொடுத்துள்ளனர். அதற்குள் லாரி மாயமானது. இச்சம்பவம் ஜூலை 1-ம் தேதி நடந்துள்ளது.

இருபது நாட்களாகியும் திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதியாதநிலையில், தற்போது இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர், போலீஸாரை தடுத்த பிரமுகர்கள் ஆகிய மூவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் போலீஸார் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

திருவேகம்பத்தூர் அருகே மணிமுத்தாறு மற்றும் ஓடைகளில் அதிகளவில் மணல் கடத்தல் நடக்கிறது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பகுதி என்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x