

மதுரை கூடல் நகர் ரயில்நிலையம் அருகே மூட்டை மூட்டையாக நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கொட்டப்பட்டுக் கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முறையாக மருத்துவக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாகவே உள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனைக் கழிவுகள் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் வைகை ஆற்றில் கலப்பதாகக் கூறப்படுகிறது.
அதுபோல் வைகை ஆறு கரையோரங்களிலும், கண்மாய்கள், புறநகர் ரிங் ரோடு பகுதிகளில் தொடர்ச்சியாக மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், உணவுக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் எச்சரித்தாலும் குப்பைகளை தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு இல்லாமல் பொது இடங்களில் இரவோடு இரவாகக் கொட்டி வரும் நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில் இன்று காலை கூடல் நகர் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் மூட்டை மூட்டையாக நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், ரத்த வகை செலுத்தும் பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து இதுபோல் பொது இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.