

மதுரையில் கரோனா காலத்தில் ரத்த தானம் செய்தவர்களுக்கு ரெட் கிராஸ் சொசைட்டி விருது வழங்கிப் பாராட்டியது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரைக் கிளை சார்பில் உலகக் குருதி கொடையாளர் தினத்தை ஒட்டி ரத்த தான முகாம் நடத்திய நிறுவனங்கள், கல்லூரிகள், ரெட் கிராஸ் உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் இன்று நடைபெற்றது.
ரெட் கிராஸ் அவைத் தலைவர் புகழகிரி, துணை அவைத் தலைவர் வி.எம்.ஜோஸ், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், மாவட்ட ரத்த வங்கி நிலைய அலுவலர் ஜிந்தா, ரெட் கிராஸ் செயலர் எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
மதுரை விவேகானந்தா கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, தியாகராஜா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி, சமூக அறிவியல் கல்லூரி, மதுரைக் கல்லூரி, பெரியார் குருதிக் கொடை கழகம், வழக்கறிஞர்கள் முத்துக்குமார், ராஜ்குமார், முகாம்பிகை, ராஜூ மற்றும் பலருக்கு ஆட்சியர் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் பேசுகையில், ''மதுரை மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போட்டவர்கள் ரத்த தானம் செய்யக் கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், ரத்தப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நோயாளிகளுக்கு அரசு ரத்த வங்கி மூலம் ரத்தம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரத்த தானம் பெறுவதில் ரெட் கிராஸ் சொசைட்டியின் பணி பாராட்டுக்குரியது'' என்று தெரிவித்தார்.