Last Updated : 21 Jul, 2021 04:23 PM

 

Published : 21 Jul 2021 04:23 PM
Last Updated : 21 Jul 2021 04:23 PM

தமிழகம் முழுவதும் கூடைகளை அனுப்பி வைக்கும் கிராம மக்கள்: தலைமுறை தலைமுறையான கைத்தொழில்

தமிழகம் முழுவதும் கூடைகளை அனுப்பிவைக்கும் கிராம மக்கள், தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்து வருவதாகவும், ஒருகாலமும் எங்கள் தொழில் அழியாது என்றும் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ளது மணகெதி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காலனித் தெருவில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 150 குடும்பத்துக்கும் மேற்பட்டோர் கூடை முடையும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

இங்கு முடையப்படும் கூடைகள் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தக் கூடைகள் பெரும்பாலும் காய்கறிக் கடைகளுக்கும், விவசாயத் தொழிலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

சிறிய கூடைகள் முதல் பெரிய அளவிலான கூடைகள் வரை பல்வேறு அளவுகளில் மூங்கில், யூகலிப்டஸ், நொச்சி எனப் பல்வேறு வகையான குச்சிகளைக் கொண்டு முடையப்படும் இந்தக் கூடைகளை ரூ.50 முதல் ரூ.250 வரை விற்பனை செய்துவருகின்றனர். மணகெதி கிராமத்தின் கூடைக்கென்று தனிப் பெயர் உண்டு என, கூடையை முடையும் அனைவரும் பெருமையுடன் கூறுகின்றனர்.

கூடைகளுக்குத் தேவைப்படும் குச்சிகளை பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நாள் முழுக்கச் சேகரித்து வருகின்றனர். அதன் பிறகு, நாள் ஒன்றுக்குச் சிறிய அளவிலான கூடை என்றால் 10 வரையிலான எண்ணிக்கையிலும், பெரிய அளவிலான கூடைகள் என்றால், 3,4 என்ற எண்ணிக்கையிலும் முடைகின்றனர்.

தலைமுறை தலைமுறையாக இந்த மக்கள் இந்தத் தொழிலை விடாமல் செய்து வருகின்றனர். பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில் பிளாஸ்டிக் கூடைகள் வந்தாலும், மரக்குச்சிகளால் முடையப்படும் கூடைகளுக்குத் தனி மதிப்பு இன்றும் உண்டு என்கின்றனர், கிராம மக்கள்.

இதுகுறித்து, கூடை முடையும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்மணி 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், "என்னதான், வண்ணமயமான பிளாஸ்டிக் கூடைகள் வந்தாலும், இந்தக் கூடைகளின் மீது காய்கறிகளை வைத்துத் தண்ணீர் தெளிக்கும் போது, ஈரத்தன்மையை கூடை எடுத்துக்கொள்வதால், காய்கறிகள் எப்போதும் கெடாமல் இருக்க உதவுகிறது. பிளாஸ்டிக் கூடைகள் தண்ணீரை உறிஞ்சும் தன்மை இல்லாததால் காய்கறிகள் பாதிக்க வாய்ப்புண்டு.

தமிழ்மணி

எனவே, காய்கறிக் கடைகளில் பெரும்பாலும் மரக்குச்சிகளால் ஆன கூடைகளையே பயன்படுத்துவர். அதேபோல், விவசாயப் பணியில் எருக்களை வயலில் வீச இந்தக் கூடைகள்தான் எளிமையாக இருக்கும். இதன் மூலம் எருக்களை வீசும்போது எருக்கள் பரவலாக வயலில் விழும். ஆனால், பிளாஸ்டிக் கூடைகளைக் கொண்டு வீசும்போது ஒரே இடத்தில் எருக்கள் விழும். அதேபோல், பல்வேறு பகுதிகளில் நாற்று முடிச்சுகளைத் தூக்கிச் செல்லவும் இந்தக் கூடைகள் எளிமையானதாக அமைகின்றன" என்றார்.

கிராம மக்களிடம் கூடைகளை வாங்கி பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கும் மணகெதியைச் சேர்ந்த செல்வகுமார் கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நாட்களில் கூடைகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதனால், பெரும்பாலான கூடைகள் தங்கிவிட்டன.

இதனால் கூடை முடையும் தொழிலில் சற்று சுணக்கம் ஏற்பட்டு, பலருக்கும் வருமானம் குறைந்தது. தற்போது பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால், கூடைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியும். காய்கறிக் கடைகளுக்கான கூடைகள், வாழைக்காய் விற்பனைத் தட்டு, பூக்கூடைகள், விவசாயப் பணிகளுக்கான கூடைகள், கோழி மற்றும் ஆட்டுக்குட்டிகளை மூடிவைக்க காற்றோட்டம் கொண்ட கூடைகள் எனப் பல வகையில் கூடைகளை எங்கள் கிராம மக்கள் முடைந்து வருகின்றனர். இந்த வேலையைத் தவிர எங்கள் மக்களுக்கு வேறு வேலை தெரியாது" என்றார்.

கிராமத்தின் முகப்பில் உள்ள ஒரு மளிகைக் கடையில் அளவு வாரியான கூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் கூடைகள் விற்கப்படுகின்றன. மேலும், கிராம மக்கள் தாங்கள் முடையும் கூடைகளை அந்த மளிகைக் கடையிலும் அவ்வப்போது விற்பனை செய்து தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x