

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கரோனா ஊரடங்கு, நோய் தாக்குதல் போன்றவற்றால் வாழை விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயத்தில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க விவசாயிகள் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, தட்டான்குளம், கழுகேர்கடை, நயினார்பேட்டை, கலியாந்தூர், பச்சேரி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. சமீபகாலமாக வாழைகளில் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இதனால் இலைகள் காய்ந்து, வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. சில மரங்கள் காய்க்காமலேயே கருகிவிடுகின்றன. ஏற்கெனவே கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது வாழையில் நோய் தாக்குதலால் வேதனை அடைந்துள்ளனர். மேலும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க வாழை விவசாயிகள் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.
இதுகுறித்து திருப்புவனம் வாவியரேந்தல் விவசாயி கண்ணன் கூறுகையில், ''ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். நோய் தாக்குதலால் வாழைகள் முழுவதும் கருகிவிட்டன. மருந்து தெளித்தும் பயனில்லை. காப்பீடு செய்யாததால் இழப்பீடும் கிடைக்காது. இதனால் வாழையை வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டு, வாங்கிய கடனை அடைக்க விவசாயிகள் கூலி வேலைக்குச் செல்கின்றனர்'' என்று தெரிவித்தார்.