பாம்பன் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 500 கிலோ எடை கொண்ட அரிய வகை திருக்கை மீன்

பாம்பன் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 500 கிலோ எடை கொண்ட அரிய வகை திருக்கை மீன்
Updated on
1 min read

ராமேசுவரம் அருகே பாம்பன் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீனவர்கள் வலையில் அரியவகை 500 கிலோ எடையிலான திருக்கை மீன் ஒன்று சிக்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மணல்திருக்கை, புள்ளித்திருக்கை கட்டித் திருக்கை, ஒலைவாலன் திருக்கை, மணிவாலன் திருக்கை, சங்குவாயன் திருக்கை, யானைத் திருக்கை, வட்டத் திருக்கை, செந்திருக்கை, முண்டக்கண்ணன் திருக்கை, அம்மணத் திருக்கை, அடல் திருக்கை, செம்மண் திருக்கை, களித் திருக்கை, அட்டணைத் திருக்கை, பேய்த் திருக்கை, அழுக்குத் திருக்கை, சுண்ணாம்புத் திருக்கை, கழக்குத் திருக்கை, பூவாளித் திருக்கை, பூவாரித் திருக்கை, கொம்புத் திருக்கை, குருவித் திருக்கை, வல்வடித் திருக்கை, கொட்டுவா திருக்கை, சுருள் திருக்கை, புளியன் திருக்கை, கள்ளத் திருக்கை, சோனகத் திருக்கை, கருவால் திருக்கை, ஓட்டைத் திருக்கை, கோட்டான் திருக்கை, பஞ்சாடுத் திருக்கை, மட்டத் திருக்கை, சப்பைத் திருக்கை, செப்பத் திருக்கை, நெய் திருக்கை, சீமான் திருக்கை, ஆடாத்திருக்கை, உள்ளான் திருக்கை, ஊழித் திருக்கை, செம்மூக்கன் திருக்கை, கூண்டத் திருக்கை, சமன் திருக்கை, சவுக்குத் திருக்கை, தடங்கான் திருக்கை, வண்ணாத்தித் திருக்கை, பாஞ்சாலன் திருக்கை, கொப்புத் திருக்கை, கட்டுத் திருக்கை, கண்ணாமுழித் திருக்கை, முள்ளுத் திருக்கை உள்ளிட்ட திருக்கை மீன்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் பாம்பனிலிருந்து மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்ற விசைப்படகு ஒன்றில் பல வகை மீன்களுடன் அரிய வகை சங்குவாயன் திருக்கை மீன் ஒன்றும் இன்று சிக்கியது. இதனை மீன்வளத்துறை ம்ற்றும் மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள கடல்சார் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்களும் ஆய்வு செய்தனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுமார் 200 அடி ஆழத்தில் இந்த திருக்கை மீன் பிடிப்பட்டிருக்கலாம். மீனின் நீளம் 12 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டதாகும். சுமார் 500 கிலோ எடையுள்ளது.

இந்த திருக்கை மீனின் முதுகெலும்பு பக்கதில் உள்ள புள்ளிகளை ஒப்பிடும்போது ‘ஹிமாண்டுறா டுடுள்’ (Himantura tutul) என்ற வகையைச் சேர்ந்ததாக தெரிகிறது. மீனவர்கள் இதனை சங்குவாயன் திருக்கை என்று அழைக்கின்றனர். மேலும் பகுப்பாய்வு மற்றும் டிஎன்ஏ தொழில்நுட்பத்தை கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

இந்த வகை திருக்கை மீன் இந்தியப் பெருங்கடல், தான்சானியா, இந்தோ-மலாய் தீவு, பாலி கடல், தென் சீனக் கடல் மற்றும் சுலு கடல் பகுதிகளில் காணக்கூடியது ஆகும், எனக் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in