

தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என பாஜக நினைக்கவில்லை எனக் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்டத் தலைமை அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதற்கான ஆதாரங்களைப் பாஜகவினர் திரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என பாஜக நினைக்கவில்லை. ஆனால், கொங்கு பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாஷைகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், பல ஆண்டு கால ஏக்கமாக உள்ளன.
வருங்காலத்தில் மாநில அரசு அவற்றை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதைப் பொறுத்தே கொங்கு நாடு குறித்து அடுத்தகட்டப் பரிசீலனை வரலாம்'' என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.