

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த மாணவர் பிரனேஷ். இவர் பண வசதி இல்லாததால் வெளிநாட்டில் நடக்கும் செஸ் போட்டிகளில் பங்கேற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகிறார்.
காரைக்குடி தந்தை பெரியார் நகர் 9-வது வீதியைச் சேர்ந்தவர் பிரனேஷ் (15). அங்குள்ள வித்யாகிரி பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். தந்தை முனிரத்தினம் ஜவுளிக்கடையில் கணக்கராகவும், தாயார் மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் பணிபுரிகின்றனர்.
அவர் தனது 10 வயதிற்குள்ளே மாவட்ட, மாநில செஸ் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். மேலும் இந்திய அளவில் கல்வித்துறை சார்பில் 2017-18, 2018-19 ஆகிய கல்வியாண்டுகளில் நடந்த 2 போட்டிகளிலும் தங்கம் வென்றார்.
அவரை, அப்போதைய முதல்வர் பழனிசாமி பாராட்டி ரூ.2 லட்சம் பரிசு கொடுத்தார். இதுவரை 58-க்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
மேலும் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஏரோபிளாட் கிராண்ட் மாஸ்டர் போட்டியில் ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் சவ்ஜிங்கோ, ஜெர்மனி சூப்பர் கிராண்ட் மாஸ்டர் சிவானோராஸ்மஸ் ஆகிய முன்னணி வீரர்களை வென்றார். இந்த போட்டி மூலம் அவருக்கு சர்வதேச மாஸ்டர் பட்டம் கிடைத்தது.
மேலும் சமீபத்தில் ஆன்லைனில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று, ஆகஸ்டில் நடக்கும் ஆன்லைனில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வருகிறார். இருந்தபோதிலும் உலக அளவில் நடக்கும் நேரடி போட்டிகளில் பங்கேற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதே அவரது கனவாக உள்ளது.
ஆனால் பணம் இல்லாததால் உலக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து மாணவர் பிரனேஷ் கூறியதாவது: எனது தாயார் முதலில் செஸ் விளையாட சொல்லி கொடுத்தார். தற்போது சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரமேஷ் பயிற்சி தருகிறார். நான் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்று விட்டேன். மேலும் உலகளவில் நடக்கும் சில போட்டிகளில் பங்கேற்றாலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுவிடலாம்.
ஒரு போட்டியில் பங்கேற்றாலே சில லட்சங்கள் வரை செலவாகிறது. போதிய பணம் இல்லாததால் உலக நாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. ஸ்பான்சர் உதவி செய்தால் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன், என்றார்.