இரிடியம், கலசம் தருவதாக ரூ 3.5 கோடி மோசடி: கடத்தப்பட்ட போடி நபர் மானாமதுரையில் மீட்பு

போடியில் கடத்தப்பட்டு மானாமதுரையில் மீட்கப்பட்ட கவுர்மோகன்தாஸ்.
போடியில் கடத்தப்பட்டு மானாமதுரையில் மீட்கப்பட்ட கவுர்மோகன்தாஸ்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரிடியம், கலசம் தருவதாக ரூ.3.5 கோடி மோசடி செய்ததால் கடத்தப்பட்ட தேனி மாவட்டம் போடி நபரை போலீஸார் மீட்டனர். மேலும் இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

மானாமதுரை, ஆனந்தபுரம் பைபாஸ் ரோட்டைச் சேர்ந்தவர் குட்டி (எ) ராஜீவ்காந்தி (39). இவரிடம் தேனி மாவட்டம் போடி வட்டம் பொட்டல்களம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கவுர்மோகன்தாஸ் (38) இரிடியம், கோபுரக் கலசம் தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பி அவரிடம் 2015-ம் ஆண்டு ரூ 3.5 கோடியை ராஜீவ்காந்தி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சொன்னபடி இரிடியம், கோபுரக் கலசத்தை கவுர்மோகன்தாஸ் கொடுக்கவில்லை. மேலும், பணத்தையும் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி, தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று ஊரில் இருந்த கவுர்மோகன்தாஸை காரில் கடத்தி, மானாமதுரையில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்தார்.

இதுகுறித்து கவுர்மோகன்தாஸ் மனைவி அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் போடி, மானாமதுரை போலீஸார் இணைந்து ராஜீவ்காந்தி வீட்டில் அடைத்து வைத்திருந்த கவுர்மோகன்தாஸை மீட்டனர். இது தொடர்பாக ராஜீவ்காந்தி, கஞ்சிமடையைச் சேர்ந்த ராஜேந்திரன் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பிறகு மூவரையும் விசாரணைக்காக போடி போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in