பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண சிறப்புக் குழு: மதுரை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை
மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களுடைய பிரச்சினைகளையும், குறைகளையும் அறிந்து விரைவாகத் தீர்வு காண ஓய்வுபெற்ற அலுவலர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் நியமித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்துக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் பொதுமக்கள் சொத்து வரி, பெயர் மாற்றம், புதிய சொத்து வரி, காலிமனை வரி விதிப்பு மற்றும் வரி வசூல் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் வழங்குவதற்கு 'வாழ்க வரியாளர்' எனும் சிறப்பு முகாம் கடந்த 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.
இம்முகாமில் நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 1,928 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 503 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 1,425 மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இம்முகாம்கள் மூலம் தெரியவந்துள்ள சில நீண்ட நாள் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வுகளை வழங்கிட, வரி இனங்களில் நீண்ட நாள் அனுபவம் உள்ள மூன்று ஓய்வுபெற்ற அலுவலர்களை ஆலோசகர்களாகக் கொண்டு துணை ஆணையாளர் தலைமையில், சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு ஒரு மாதத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சேவைகளைச் செம்மைப்படுத்தி, தீர்வுகள் விரைவாக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
