பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

கரோனா விதிமீறல்; மே முதல் ஜூலை 15 வரை ரூ.3,35,06,790 அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி

Published on

மே மாதம் முதல் ஜூலை 15 வரை கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 6,668 நிறுவனங்களிடமிருந்தும், 3,208 தனிநபர்களிடமிருந்தும் ரூ.3,35,06,790 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 17) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் சார்பில் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில், அதிகப்படியான மண்டல அமலாக்கக் குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை (10.07.2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (11.07.2021) ஆகிய இரு தினங்களில் புரசைவாக்கம், தியாகராய நகர், ராயபுரம் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மட்டும் ரூ.5,43,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மே மாதம் 2021 முதல் 15.07.2021 வரை கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 6,668 நிறுவனங்களிடமிருந்தும், 3,208 தனிநபர்களிடமிருந்தும் ரூ.3,35,06,790 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2,013 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 52 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2,00,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in