

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கரோனாவால் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் ஆடித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜப்பெருமாள் கோயில் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.
அதனைத்தொடர்ந்து நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடிப்பர். இத்திருவிழாக்கள் கரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி கோயில் உள்பிரகாரத்தில் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று கள்ளழகர் கோயிலில் காலை 7.15 மணிக்குமேல் 8.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. பட்டர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் 9 மணிக்குமேல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தினமும் காலையில் சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்கப்பல்லக்கில் எழுந்தருள்வர். மாலையில் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருள்வர். அதன்படி 2 ஆம் நாள் சிம்மவாகனம், 3 ஆம் நாள் அனுமார் வாகனம், 4ம்நாள் கெருட வாகனம், 5ம்நாள் சேஷ வாகனம், 6ம் நாள் யானை வாகனம், 7ம் நாள் புஷ்பச் சப்பரம், 8ம் நாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வர். 9ம் நாள் ஜூலை 24ம் தேதி சனிக்கிழமை காலை தேரோட்டம் நடத்துவதற்கு தடை உள்ளதால் காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் கோயில் உள்பிரகாரத்தில் சட்டத்தேரில் எழுந்தருள்வர். அன்று மாலை புஷ்பப்பல்லக்கு நடைபெறும். பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் இரவு சப்தவர்ணம் புஷ்ப சப்பரம் எழுந்தருளலுடன் திருவிழா நிறைவுறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் தி.அனிதா, கோயில் தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.