தனி விமானத்தில் டெல்லி விரைந்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா: தலைமையில் மாற்றமா?

தனி விமானத்தில் டெல்லி விரைந்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா: தலைமையில் மாற்றமா?
Updated on
1 min read

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனி விமானத்தில் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

78 வயதான எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுடன் இன்று டெல்லி சென்றிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பாஜக கர்நாடக மாநில பொறுப்பாளர் அருண் சிங் கர்நாடகா வந்து சென்றார். அதற்குள் எடியூரப்பா டெல்லி செல்வதாலேயே பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளன.

கடந்த முறை அருண் சிங் வந்தபோதும் எடியூரப்பா மீது கட்சி மேலிடம் அதிருப்தி போன்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், அருண் சிங்கோ, எடியூரப்பாவுக்கு எப்போதும் கட்சியின் ஆதரவு உண்டு, அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறிச் சென்றார்.

இந்நிலையில், எடியூரப்பா தனது மகனுடன் தனி விமானத்தில் டெல்லி விரைந்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயேந்திரா, அரச நடவடிக்கைகளில் தலையிடுவதாக கட்சியில் அதிருப்தியும், மக்கள் மத்தியில் கோபமும் இருப்பது தெரிந்ததே. மேலும், தமிழ்நாட்டுடன் மேகதாது விவகாரத்திலும் எடியூரப்பா காட்டும் வேகத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் எடியூரப்பா டெல்லி விரைந்துள்ளார்.

எடியூரப்பாவின் திடீர் டெல்லி பயணம் குறித்து மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக், "இது வழக்கமான நடவடிக்கையே, இதில் பெரிதாக எதுவும் இல்லை. கர்நாட்காவில் தலைமையில் மாற்றம் ஏதும் வரப்போவதில்லை. எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்கிறார்.

காவிரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அவர் இந்த சந்திப்பை ஏற்படுத்துகிறார்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in