குற்றவாளிக்கு கேக் ஊட்டிய மும்பை போலீஸ்: விசாரணை தொடங்கியது

குற்றவாளிக்கு கேக் ஊட்டிய மும்பை போலீஸ்: விசாரணை தொடங்கியது
Updated on
1 min read

மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை மேற்கொண்ட குற்றவாளிக்கு கேக் ஊட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து, துறை சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மும்பை புறநகர்ப் பகுதியான ஜோகேஸ்வரி காவல் நிலையத்தில், மூத்த ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் மகேந்திர நெர்லேகர். அவர் காவல் சீருடையில் டேனிஷ் ஷேக் என்னும் குற்றவாளிக்குப் பிறந்தநாள் கேக் ஊட்டிய 15 விநாடி வீடியோ இணையத்தில் அண்மையில் வைரலானது.

கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை மேற்கொண்ட டேனிஷ், ஜோகேஸ்வரி காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் ஆவார். ஹவுஸிங் சொசைட்டி அலுவகத்தில் சுமார் 2 வாரங்களுக்கு முன்னால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

காவல்துறை அதிகாரியே குற்றவாளி ஒருவருக்கு கேக் ஊட்டிய வீடியோ வைரலான நிலையில், டிசிபி மகேஷ் ரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறை உதவி ஆணையர் இதுதொடர்பான விசாரணையைத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மூத்த ஆய்வாளர் மகேந்திர நெர்லேகர் கூறும்போது, ''இது பழைய வீடியோ. ஹவுஸிங் சொசைட்டி அலுவகத்தில் இடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே டேனிஷ் கையில் கேக் உடன் இருப்பது எனக்குத் தெரியவில்லை'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in